Friday, July 9, 2010

உள்ளத்தின் உளறல்கள் - 1

உயிரை விட்டு
உடலை உதறி விட்டு செல்ல
வெறும் போர்வை அல்ல
வாழ்க்கை ஒரு கவசம்
பொறுக்க முடியாத பொழுதுகளின் அவிச்சலில்
உள்ளே புளுங்கி மனசு திணறினாலும்
அறுத்து விடமுடியாதபடி
இறுக்கப்பட்டிருக்கிறது
உறவுகளாலும் உணர்வுகளாலும்

**************************************************

விலைக்கு வாங்க முடியாதது
உலகில் அதிஸ்டம் ஒன்றுதான்
பணம் இருந்தால்
பாசமும் தேடிவரும்- இங்கு
உறவுகளின் சந்தைகளில் கூட
போலிகள் மலிவுதான் !!

*************************************************

சிந்திக்க தெரியாமல் இருப்பதே
சிலவேளைகளில் சிறப்பு
சில தப்புகள் மூளைக்கு தென்பட்டு
மனசை சாகடிப்பதை விட - எதையும்
சிந்திக்க தெரியாமல் இருப்பதே சிறப்பு

************************************************

எத்தனை தடவை சொல்லியும்
கேட்பதில்லை மனசு
நெருப்புக்குள் போராட மறுக்கிறது
நிழல் தேடி ஓடுகிறது - கேட்டால்
கௌரவமான வாழ்வு எதற்கு
நிம்மதி போதும் என்கிறது ???



Thursday, July 1, 2010

பிரம்மனுக்கு ஒரு கண்டனம்

வாடைக்காற்று வரிந்து கட்டிக்கொண்டு வீசிக்கொண்டிருக்க அதை ஆக்ரோசமாக கிழித்தபடி ஒரு மோட்டார் வண்டியில் நான். ஓரத்தில் கிடந்த புழுதிகளை எல்லாம் அள்ளி கொணாந்து மூஞ்சியில் வீசிய காற்றை முறைத்து விட்டு ஹெல்மட்டின் கண்ணாடியை இழுத்து மூடச்சென்ற கைகள் போனபாதையில் பாதியில் நின்று திரும்பி வந்தன. காரணம் விழிகளிலிருந்து ஒரு கட்டளை போயிருந்தது. முன்னால் "ஒரு தேவதை ஒன்று தெருவில் வருகிறது" என்று எங்கோ வாசித்த கவிதை ஒன்றை நினைவு படுத்தியபடி புழுதி வீழ்ந்த வலியை கூட பொறுத்தபடி கண்கள் அழகுப்பசியெடுத்து ஒரு காவாலித்தனம் பண்ணிக்கொண்டிருந்தன. 

தெருவில் கலைந்து கொண்டிருந்த புழுதிகளினூடு ஒரு உருவம் கலந்து வந்து கொண்டிருந்தது, சட்டென என் வேகம் குறைய சந்தோஷ் சிவனின் கமெராவாக மாறிய கண்கள் அந்த காட்சிகளை எல்லாம் களவாக ஒளிப்பதிவு செய்துகொண்டிருக்க மூளை ஒவ்வொரு பிரேம்களையும் பத்திரமாக பதிவு செய்து கொண்டிருந்தது.

அவள் கடந்து போன அந்த சில வினாடிகளில் கொஞ்சம் நிலைதடுமாறிப்போனது நெஞ்சம். சினிமாப்படத்து ஹீரோக்கள்  போல பின்னாலே போடா!!  என்று மனசு சொல்ல... புத்தியோ "போடா புண்ணாக்கு.." என்று வண்டியை நேரே செலுத்த...  மெதுவாக நகர்ந்த வண்டியில்.. புத்தியால் புறக்கணிக்கப்பட்டு கலைக்கப்பட்ட எத்தனையாவது காதல் கரு.. இது....?  என்றவாறு மனம் ஒரு பெருமூச்சு விட்டபடி உள்ளே அடங்கி அந்த அழகியின் சில வினாடி  நினைவுகளை அசைபோட ஆரம்பித்தது.

அவள் என்ன வண்ண்ணம் என்று இன்னும் மூளைக்கு பகுக்க தெரியவில்லை அமைதியாக இருந்த அந்த அழகிய வண்ண முகம் ஒரு சின்னஞ்சிறு புன்னகை மட்டும் அணிந்திருக்க அவளை ஒரு சிவப்பு வண்ண ரீ சேர்ட்டும் நீல ஸ்கேர்ட்டும் அன்போடு இறுக அணைத்திருந்தன கொடுத்து வைத்த புடவைகள் என்று அலுத்துகொண்டது மனம்... தெளிவாக வரையப்பட்டிருந்த அவள் உருவத்தின் விளிம்புகளில் அறுபட்டுப்போன  என் இதயத்தில் எங்கெல்லாமோ வலி எடுக்க வைத்தவள் செலுத்திக்கொண்டிருந்த ..சைக்கிளுக்கு கூட வலி எடுக்காமல் மிதித்துக்கொண்டிருக்க... அவள் கால்களின் அசைவில் கசங்கிப்போன மனதை இழுத்து நிமிர்த்தி இருப்பிடம் சேர்ந்த எனக்கு.... 

உன்மேல்தான்  ஆத்திரம் பிரம்மா இப்படி அழகாக பெண்களை படைக்காதே இல்லையேல் மனிதனுக்கு கண்களை படைக்காதே வௌவ்வால் போல அதிர்வுகளை வைத்து அசையக்கூடியவாறு படைத்து விடு இந்த கண்களால்தான் காதலும் கத்திரிக்காயும் கவிதைகளும்.

இவ்வளவு நேரமும் என் குசும்பை ரசித்த உங்களுக்கு என் ஆறுதல் பரிசு இந்த ஐசின் படம் மறக்காமல் கருத்து காணிக்கை செலுத்தி விட்டு செல்லுங்கள்.


Thursday, June 17, 2010

ராவணன் – ஒரு வீரனின் கதை

சின்ன வயசில சித்திரக்கதை புத்தகங்களில் அல்லது  கட்டுக்கட்டாக  ராஜாஜியின் ராமாயாண புத்தகத்தில்  படித்தவர்கள் எங்காவது பிரசங்கங்களில் அல்லது ஆன்மீக சொற்பொழிவுகளில் ராமாயண கதை கேட்டவர்கள் என எங்களுக்கு தெரியாத ராமாயணமா என நினைப்பவர்கள் ஓகே படம் பாரக்கதேவையில்லை…


கதை மூலம் – வான்மீகி முனிவர் & கம்பர்
திரைக்கதை வசனம் இயக்கம் – மணிரத்னம் சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன்
ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன்
இசை -  இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்

பாத்திரங்கள்

நவீன ஸ்ரீராமன் – பிருத்விராஜ்
சீதாதேவி - ஐஸ்வர்யாராய்
பத்துத்தலை நல்ல ராவணன் – சீயான் விக்ரம்
சூர்ப்பனகை - பிரியாமணி
அனுமார் – கார்த்திக் இவர் படத்தில் அறிமுகப்படுத்தப்படும் போது குறுக்காலே படுத்திருந்து பின்னர் குரங்கு போல தாவி வரும்   காட்சிகளில் இவர்தான் அனுமார் என்று சொல்லி விடுகிறார்கள்
கும்பகர்ணன் – பிரபு குண்டாக இருக்கிறார் என மணிரத்னம் தெரிவு செய்தாரோ என்னமோ…
விபீஷணன் – மன்னிக்கவும் என்னால் அடையாளம் காணமுடியவில்லை !!


சந்தோஷ் சிவனின் ரசனைமிக்க ஒளிப்பதிவில் இசைபுயலின் உள்ளத்தை அள்ளி செல்லும் இசையில் மணிரத்னம் வழங்கியிருக்கும் இந்த நவீன ராமாயணத்தை ஒரு வீரனுக்குள் ஒழிந்திருக்கும் காதலை விக்ரமின் அற்புதமான நடிப்பின் வாயிலாக பார்க்க விரும்புவர்களுக்கு இது மணிரத்னத்தின் இன்னுமொரு ரோஜா.

என்னை பொறுத்தவரை படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது சந்தோஷ்சிவனின் ஒளிப்பதிவில் மிக அற்புதமான லொகேஷன்களில் எடுக்கப்பட்ட காட்சிகள்.. ஒவொரு லொகேஷன்களும் விழிகளை விரியச்செய்கின்றன. சந்தோஷ்சிவனின் கமெரா கோணங்களும் அசைவுகளும் முக்கியமாக விக்ரம் ஆற்றின் நடுவே  தெப்பத்தில்  சுற்றிக்கொண்டிருக்கும் காட்சி ப்ருத்விராஜ் சிகரெட்டால்  பத்திரிகையில் வந்த முகங்களை சுடும் காட்சி என்பன சொல்லும் படியான உதாரணங்கள்..  இவரின் சிறைச்சாலை தளபதி உயிரே இருவர் அசோகா போன்ற படங்கள் பார்த்தவர்களுக்கு இன்னுமொரு அனுபவம் . படத்தின் முழு பிரேம்களையும் ஸகிறீன் சொட் எடுத்தால் வாழ்க்கை  பூரா ஒவ்வொண்ணா வால்பேப்பராக போட்டுக்கொண்டே இருக்கலாம் .
முக்கியமாக  அந்த கிளைமாக்ஸ் … ம்ஹூம்.. இது வரை எந்த தமிழ் படங்களிலேயோ ஏன் இந்திய படங்களிலேயோ கூட பார்த்ததில்லை.

கோபமான முகத்துடன் படம் முழுக்க ஈரமாக ஐஸ்வர்யாராய்.. வீரமும் தாபமும் ஆக்ரோஷமும் நிறைந்த விக்ரம்.. நடிப்பில்... எனக்கு சொல்ல தெரியாதுங்கோ அதால விட்டிற்றன் .. மனுசன் .. கலக்கியிருக்கிறார் . பிருத்விராஜ் கொடுத்து வைத்தவர் பிரசாந் அப்பாஸ் அஜித் வரிசையில் ஐசுடன் டூயட் பாடியவர்களின் வரிசையில் சேர்ந்து புகழ் தேடிக்கொண்டார்.
வழக்கமான மணிரத்னங்களின் படத்தில் வரும் ரெயில் காட்சியும் தப்பாமல் வருகிறது உயிரே படத்தில் தைய தையா பாடலில் வருவது போன்ற காட்சி அதே இடத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது.

இசைபுயல் ஆரம்பத்திலேயே அதிரடியாகவருவார் படம் முழுக்க அடிக்கடி நினைவுபடுத்திகொண்டே இருந்தார்  காட்டுசிறுக்கி பாடல் ஒருமுறை பின்னணியில் அடிக்குரலில் வரும் அனுபவித்து பாருங்கள்..   நான் மிஸ்பண்ணுவதாக நினைப்பது பாடல்காட்சிகளை காட்டுசிறுக்கி முழுமையாக இல்லை. உசிரே போகுதே பாடல்  முதன் முறையாக மணிரத்னத்தின் படத்தில் திரைக்கதை ஓட்டத்துடன் பொருந்தி வராத பாடலாக எனக்கு தோன்றியது.
நவீன ராமயணம் சூர்ப்பனகையின் காதலிலும்  மற்றும் வபீஷணனின் மனமாற்றத்துக்கு பின்னரும் முழுமையாக வேறுபடுகிறது. பாத்திரங்கள் அதேபோல படைக்கப்படிருப்பது சுவாரஸ்யமாக இருகிறது.
இந்த படத்தில் உள்குத்து அரசியல் ஏதும் இருக்கோ எனக்கு தெரியாதப்பா நான் படத்தை நன்றாக ரசித்தேன். விஜய் ரசிகர்களுக்கும் இந்த ரசிகர்களுக்கும் நிறைய வித்தியாசம் தெரிந்தது அமைதியாக அடிதடி இல்லாமல் வந்து போனார்கள் ஐஸுக்கும் இசைப்புயலுக்கும் டைட்டிலில் விசில் குடுத்தார்கள். ஒரு வயது போன ஒருவர் இடைவேளையில் எழுந்து சென்றபோது மணிரத்னத்தின் இன்னொரு குப்பை என்றார் ... எப்படி என்று தெரியவில்லை .. 

மொத்தத்தில் வழமையான மணிரத்னம் படங்கள் போல படம் எத்தனை முறையும் பாரக்கலாம் ..



Wednesday, June 16, 2010

காதல் பிழைப்பு..

காதல்!! இயற்கையின் ஒரு சாதாரண நிகழ்வுக்கு மனிதன் இட்டுகொண்ட நாகரீக நாமம்...
காதல் வயப்பட்டு "கவி" ஆனவர்கள் இருக்கிறார்கள்.. இந்த உலகத்தை விட்டுகாணாமல் போனவர்களும் இருக்கிறார்கள் ...
இதைவிட பிச்சைக்காரர்கள் ஆனவர்கள் பலர்... பைத்தியம் ஆனவர்கள் சிலர்....  ஒரு சிலர் கோடீஸ்வரர்களும் ஆகியிருக்கிறார்கள்...  பின்னே...!! அம்பானி பெண்ணை அணைக்க தெரிஞ்சா போதாதா சீவியத்துக்கும் மாமனார் சொத்தில குப்பை கொட்ட....ஒரு விதத்தில் காதல் ஒரு முதலீடு !! இங்கு காசு அல்ல மனசு முதலீடு செய்யப்படுகிறது !!
ஆக .. காதல் புனிதமானது மனசு சம்பந்தப்பட்டது என்பதெல்லாம் உள்ளே ஒழிந்திருக்கும் காமத்தை மறைக்கும் கந்தல் துணிகள் ...
அத்தனை மனித உறவுகளும் ஏதோ ஒரு தேவையில்தான் இணைந்திருக்கின்றன.. காதல் மட்டும் விதிவிலக்கா என்ன...

காதல் பிழைப்பு..
எத்தனை காலமாய்
படிக்கின்ற பாடம் ஒன்று 
பரீட்சை என்று வந்தால்.. பயம் !!
காதல் !!

ஒரு நொடியிலும் இடி விழும்.
ஒரு வருடம் கழித்தும் பதில் வரும்.
முட்டையோ !! நூறோ !!
இடையில் நட்பாய் இருப்போம் என்று
நாற்பதோ ! ஐம்பதோ !
முடிவில் நாறப்போவது நம் பிழைப்புத்தான் !!

ஆசை யாரை விட்டது
வாங்கிய முட்டைகள் பொரித்த
குஞ்சுகளின் கூவலில்
கவிதை எழுதிக்கொண்டு..
அடுத்த பரீட்சைக்கு
ஆயத்தமாகும் நெஞ்சங்கள் !!

***********************************************

அழகிய ஆப்பிள்கள் !!
எந்தபழம் எட்டுகிற உயரத்தில் ??
பார்த்து கணிக்க முடிவதில்லை ..
பறிக்க பாய்ந்து பாய்ந்து.. ...
பாதம் நொந்த பிறகும்.
அந்த பரவசம் விடுவதில்லை !!

 **********************************************

கருத்துக்களை விட்டு விடுங்கள் .. கவிதை பிடித்திருந்தால் உங்கள் அன்பான வாக்குகளை அளிக்க மறவாதீரகள்..
ப்ரியமுடன்

த.கரன்






Friday, June 11, 2010

கூழாங்கல் பயணம் ....

ஒரு மலைச்சரிவில் கூழாங்கற்களாய் !!
உருண்டோடிக்கொண்டிருக்கிறது ...
ஒவ்வொருவரின் வாழ்வும் !!

பாதை நிர்ணயிக்கப்பட்டது
கரடு முரடாய்..

பயணம் இதுவரை ..
பாதையிலும்
பக்கத்து ஓடும் பாறாங்கற்களுடனும்.
மொத்துண்டு மோதுண்டு
மனசெல்லாம் பட்ட காயம்
காலத்தோடு ஆறிப்போய்..

அந்தரத்தில் பறந்த  - அந்த
சில நாள் சந்தோசம்..
உந்தி தள்ளி மேலும் உருட்டி விட

மீண்டும் எங்கோ வீழ்ந்து சிதறி!!
ஆறிப்போன வடுக்களும்..
ஆழமாய் வலி எடுக்க.

தொடரும் ஓட்டத்தில்...
தோள் கொடுத்த கற்கள் சில
பாதி பயணத்தில்
பள்ளத்துள் விழுந்து விட..

அந்த
நினைவுகளை சுமந்தபடி..
தொடரும் என் பயணம்..
எங்கோ வெட்டப்படிருக்கும்
என் குழியை நோக்கி !

கரன் ..

Tuesday, June 8, 2010

வணக்கம் !! - வாழ்க்கை..!!

விடுகதை போன்ற இந்த வாழ்க்கையைப்போல சுவாரஸ்யமான திரைக்கதை வேறு எதுவும் கிடையாது ஒவ்வொரு நாளும் விதம் விதம் திருநாளோ  ..?  சினநாளோ..? யார் கண்டார்...! புதிய புதிய பாத்திரங்கள் புதுமையான மனிதர்கள் மலைக்கவைக்கும் திருப்பங்கள் நம்பமுடியாத நாடகங்கள் என வருடக்கணக்காக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் எங்கள் வாழ்க்கை. முடிந்து போன ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அத்தியாயம்..! விடியப்போகும் ஒவ்வொரு.. நாளை’யும் ஒவ்வொரு புதிர்..!

ஆண்டாண்டு காலமாய் அரங்கேறி மேடையில் ஓடிக்கொண்டிருக்கிறது நாடகம் நாம் புதிய பாத்திரம் இடையில் வந்து விழுகிறோம்  எதுவுமே எம் கையில் இல்லை எழுதப்பட்ட தலைவிதியில் திரைக்கதை எம்பங்கை நடித்து முடிக்க வேண்டியதுதான் ... மிச்சம் ! நம் கதை முடிந்த பின்னும் நாடகம் தொடரும்...

ஆனால் இருக்கும் மட்டும் நாங்கள் கதாநாயகர்கள்  எங்கள் சினிமாவை  நாங்கள் மட்டுமே மீண்டும் மீண்டும் பார்க்கிறோம். பத்து வினாடிகள் பத்து வருடங்களாக பத்து வருடங்கள் பத்து வினாடிகளாக பறந்து போக எஞ்சி இருப்பவை நினைவுகள் மட்டுமே.  சில அசை போட்டுப்பார்க்க ஆனந்தமாக இருக்கும் சில வேதனையின் விம்பங்களாக இருக்கும் எல்லாம் கதைகளை எழுதும் காலந்தான் தீர்மானிக்கிறது. காலந்தான் உலகத்தின் சிறந்த கதாசிரியன் எனபது கதையை திரும்பி பார்க்கும் போதுதான் தெள்ளென புரிகிறது..!.
காலம் எழுதிய கதைகளில் காயம்பட்ட இதயங்கள் அந்த நினைவுகளுடன் கலந்து நிற்கும் வரை துடித்து கொண்டிருக்கும்.

சிலருக்கு வாழ்க்கை ஒரே சீராக செல்லும்..!   மணிரத்னம் படம்… சிலரது கதையோ.. விஜய்படம்..?   திடீர் திடீர் திருப்பங்கள் தான் வாழ்க்கை.. அடிக்கடி சீ..?  என்ன வாழ்க்கை இது..? ஏன் வந்தோம் …? என்று  இருக்கையை விட்டு எயுந்து போகச்சொல்லும் … இடையில் விட்டு போனவர்களும் சிலர்..? சகித்து கொண்டு சரி .! வந்திட்டம் வாழ்ந்து துலைப்பம் என்று இருப்பவர்கள் பலர்…!
நீங்கள் எந்த ரகம்..???

உலகத்தில் எட்டு அதிசயங்கள் என்பது எவ்வளவு முட்டாள்தனம் என்று சிலவேளை தோன்றுகிறது ஒவ்வொரு மனிதனும் அதிசயமாய் தெரிகிறான் எனக்கு  ஏன் சிலவேளை ஒவ்வோரு உயிர்களும் அதிசயமாய் தெரிகிறது !! என்னதான் படைச்சி கொட்டினாலும் பிரமனை அடிக்க பில்கேட்ஸோ ஸ்டீவ்ஜாப்ஸோ யாராலும் முடியாது.

இயற்கையின் படைப்பில்.. உயிர்களில் பேதம் கிடையாது !! ஒவ்வொரு நாளும் ஓராயிரம் உயிர்கள் மாண்டு கொண்டிருக்க மனிதன் சாவது மட்டும் ஒரு கணக்கல்ல ஆனால் ... மனிதம் மாண்டு கொண்டிருக்கிறது இங்கே .. மனங்கள் சாகடிக்கபடுகின்றன...  உயிருள்ள பிணங்கள்தான் பல உலாவிதிரிகின்றன.. இன்றைய உலகத்தில்..!!